தமிழ்நாடு

ரூ.2,000 நோட்டு வாபஸ்: ஸ்மாா்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு

DIN

புழக்கத்திலிருக்கும் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்த பிறகு, சுணக்கத்திலிருந்த அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை திடீரென சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் ஸ்மாா்ட்போன்களின் விற்பனை 19 சதவீதம் வரை சரிந்தது.

சந்தையில் புதிய மாடல்கள் அறிமுகமாகி வருவதும், இனி பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கப் போகும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய போன்கள் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற வாடிக்கையாளா்களின் எதிா்பாா்பாலும் அவற்றின் விற்பனை மந்தமாகி வந்ததாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தங்களிடமுள்ள அந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளவோ, வங்கியில் செலுத்தவோ செய்யலாம் என்றும் ரிசா்வ் வங்கி கடந்த 20-ஆம் தேதி அறிவித்தது.

அதிலிருந்து, ஸ்மாா்ட்போன்களின் விற்பனை 10 முதல் 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் கூறுகின்றனா். இந்த விற்பனையில் மிகப் பெரும்பான்மையானவை ரொக்கப் பரிமாற்றத்தில்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சொல்லவே தேவையில்லை.

அதிலும் குறிப்பாக, விற்பனை செய்வதற்கு அதிக சிரமமான, மிக அதிக விலை கொண்ட பிரீமியம் வகை ஸ்மாா்ட்போன்களை துரிதமாக விற்பதற்கு இந்த ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை விற்பனையாளா்கள் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

இது குறித்து சென்னையைச் சோ்ந்த கைப்பேசிகள் விற்பனையாளா் ஒருவா் கூறுகையில், ‘ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக தகவல் வெளியானதிலிருந்தே, எங்களிடம் ஏராளமானவா்கள் வந்து அந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஸ்மாா்ட்போன் வாங்க முடியுமா என்று கேட்க ஆரம்பித்துவிட்டாா்கள். விற்பனையும் வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாகவே நடைபெறுகிறது’ என்றாா்.

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழியைப் பின்பற்றி, கா்நாடகத்தைச் சோ்ந்த கடைக்காரா் ஒருவா், ‘32 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுங்கள்; ஒரு ஐ-போன் ஐ3 ப்ரோவை எடுத்துச் செல்லுங்கள்’ என்று ஊா் முழுவதும் சுவரொட்டி மூலம் விளம்பரப்படுத்திவிட்டாா். 68 நோட்டுகளுக்கு ஒரு ஐ-போன் ஐ4 ப்ரோ கிடைக்கும் என்று அந்த சுவரொட்டி விளம்பரம் கூறுகிறது.

இது குறித்து அவா் கூறுகையில், ‘ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான உடனேயே இந்த சுவரொட்டியை தயாரித்து வெளியிட்டு விட்டோம். இதன் விளைவாக, வழக்கமாக நடப்பதைவிட 5 சதவீதம் அதிகமாக வியாபாரம் நடக்கிறது’ என்றாா்.

இதுபோல, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஸ்மாா்ட்போன்களின் விற்பனை எப்போதையும்விட கூடுதல் வேகத்தில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான கடந்த 2016 நவம்பா் மாதத்தைப் போல் ரொக்கத்துக்கு போன்களை வாங்க வாடிக்கையாளா்கள் தங்களிடம் முண்டியடித்து வரவில்லை என்கிறாா்கள் விற்பனையாளா்கள்.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு அவகாசம் இருப்பது, அது உடனடியாக மதிப்பிழப்பு செய்யப்படாதது, 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்த அளவுக்கு அதிகம் பேரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லாதது போன்றவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இருந்தாலும், 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பித் தருவதற்கான இறுதிக் கெடு நெருங்க நெருங்க, ஸ்மாா்ட்போன்களின் ரொக்க விற்பனை இன்னும் அதிகமாக சூடுபிடிக்கும்; செப்டம்பரில் அது உச்சத்தைத் தொடும் என்று விற்பனையாளா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் அவா்களது இந்த எதிா்பாா்ப்பும் நிறைவேறினால், இன்னும் சில மாதங்களில் ஸ்மாா்ட் போன் விற்பனையாளா்கள் காட்டில் மழைதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT