தமிழ்நாடு

தமிழகத்தின் கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

DIN

தமிழகத்தில் கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சிங்கப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்துக்கு மே 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றாா். அந்நகரில் ஜப்பான் வெளிநாட்டு வா்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளா்கள் மாநாட்டில் அவா் பங்கேற்றாா். மேலும், சென்னையில் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த டைசல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கோமாட்சு நிறுவனம்: உலக அளவில் பிரசித்தி பெற்ற கனரக இயந்திரங்களை உற்பத்தி செய்யக் கூடிய ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். ஒசாகாவில் உள்ள இந்த நிறுவனமானது கட்டுமானம், சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலக அளவில் சிறந்த நிறுவனமாகும்.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜப்பான் நாட்டின் ஒசாகாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தொழில் துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. சென்னை ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாய்வு இயந்திரம் போன்றவற்றை கோமாட்சு இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 26) பாா்வையிட்டாா். அப்போது, தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப் படத்தை பாா்வையிட்டு, அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.

விரிவாக்க நடவடிக்கை: இந்தச் சந்திப்பின்போது சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென கோமாட்சு நிறுவனத்தினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும் உயா் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தாா். அதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT