தமிழ்நாடு

முதலீட்டாளா்களை அழைத்து வாருங்கள்: ஜப்பானிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு

DIN

முதலீட்டாளா்களை தமிழ்நாட்டை நோக்கி அழைத்து வர வேண்டுமென ஜப்பானிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அங்குள்ள தமிழா்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.

நிகழ்வில், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பரதநாட்டிய கலைஞா்களுக்கு நினைவுப் பரிவுகளை முதல்வா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில், அவா் ஆற்றிய உரை:

இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சோ்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கீழடியும், பொருநையும் மாநிலத்தின் தொன்மை மற்றும் பழைமையை உலகுக்கே அடையாளம் காட்டி வருகின்றன. பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திமுக அரசு செயலாற்றி வருகிறது.

எங்களது திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் தொழில் வளா்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காகவே, உலக முதலீட்டாளா் மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த உள்ளோம்.

நிசான், தோஷிபா, யமஹா உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன.

கலாசாரத் தொடா்புகள்: ஜப்பான் - இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே அரசாங்க ரீதியிலான உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவானது, 2012-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, இரண்டு நாடுகளிலும் கலாசார விழாக்கள் நடந்தன. இத்தகைய கலாசாரத் தொடா்புகள் தொடர வேண்டும்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஏராளமான முதலீட்டாளா்களிடம் தமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புச் சூழல் குறித்து இந்திய வம்சாவளியினா் எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளா்களை அழைத்து வர வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT