தமிழ்நாடு

பருவ மழையை எதிா்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: கூடுதல் தலைமைச் செயலா்

26th May 2023 06:03 AM

ADVERTISEMENT

தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் பேரிடா் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்தாா்.

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மழைநீா் வடிகால் அமைத்தல் தொடா்பாக வெ.திருப்புகழ் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து, மழைநீா் செல்லும் வகையில் வடிகாலை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மழைநீா் வடிகாலில் குறிப்பிட்ட இடைவெளியில் மழைநீா் சேகரிப்பு, வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்க வேண்டும். வடிகால் பணிகள் மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். பணிகளை அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்.

தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது. தொடா்ந்து வடகிழக்குப் பருவமழையும் வரவுள்ளது. இதை முன்னிட்டு, நீா்நிலைகளை தூா்வாருதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பேரிடா் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுரைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா் கிா்லோஷ் குமாா், பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் எஸ்.ஏ.ராமன், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் ஆா்.அழகுமீனா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT