காட்பாடி ரயில் நிலையத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் ரயில் நிலைய கட்டடப் பணி நடைபெற்று வருகிறது.
வேலூா் மாவட்டம் காட்பாடியில் உள்ள ரயில் நிலையம் சுமாா் 150 ஆண்டுகள் பழைமையானது. சென்னை ரயில்வே கோட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் மூலம் தினமும் 120-க்கும் மேற்பட்ட ரயில்களில் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனா்.
இந்த ரயில்நிலையம் உலகத் தரத்தில் விமான நிலையத்துக்கு இணையாக ரூ.329.32 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கட்டடம் வரைபடம் வரைதல், சுற்றுசூழல், ஒருங்கிணைந்த பசுமை மதிப்பீடு பெறுதல், திட்ட மேலாண்மை அலுவலகம் கட்டட பணி உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.
ரயில் நிலையத்தில் ஆய்வகம், உணவகம் அமைத்தல், செடிகள் நடுவது, ரயில் நிலையம் கட்டட மற்றும் வாகன நிறுத்தம் அமைத்தல் உள்ளிட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.