தமிழ்நாடு

ஆத்தூர்: கிணற்றில் குதித்த மகளும், காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!

24th May 2023 08:02 AM

ADVERTISEMENT

சேலம்: ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்த மகளும், காப்பாற்ற குதித்த தந்தையும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கணேசன்(45). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்,

இவருக்கு பிரவீணா, மேகலா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மனைவி சத்யா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில்  கணேசன்  வெள்ளையம்மாள் என்பவரை  கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.

ADVERTISEMENT

மூத்த மகள் பிரவீனாவுக்கு திருமணம் நடைபெற்று தன் கணவர் வீட்டில் உள்ள நிலையில், இரண்டாவது மகளான மேகலா சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்,

தற்போது விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நிலையில் தம்பிக்கும், அக்கா மேகலாக்கும் தொலைக்காட்சி பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மேகலா, வீட்டின் அருகே உள்ள தங்களது விவசாயி கிணற்றில் குதித்துள்ளார். இதை அறிந்த தந்தை கணேசன் மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த நிலையில், இருவருக்கும்  நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனை கண்ட கணேசனின் மனைவி வெள்ளையம்மாள் கூச்சலிட, அப்பகுதி மக்கள் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மேகலாவின் உடலை மீட்ட நிலையில், கணேசனின் உடலை பல மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT