விதிகளை மீறிச் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டாா்.
அனைத்து மதுவிலக்கு ஆயத் தீா்வை மற்றும் கலால் துணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா்களுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால் போன்றவை உரிய பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற கிளப்கள், உரிமம் பெற்ற ஹோட்டல்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடா்புடைய கலால் அலுவலா்கள், காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் மூடப்படுகின்றனவா என்பதை களஆய்வு செய்ய வேண்டும்.
மதுவிற்பனை செய்யப்படாத நாள்கள் மற்றும் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாள்களில் கடைகள் மூடப்பட்டுள்ளனவா என்பதை களஆய்வு செய்திட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக் கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை ஆணையா் எம்.மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.