தமிழ்நாடு

கொசு ஒழிப்பு களப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

24th May 2023 02:23 AM

ADVERTISEMENT

கொசு ஒழிப்பு களப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2006-இல் தமிழகம் முழுவதும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் கொசு ஒழிப்பு களப் பணியாளா்கள் அமா்த்தப்பட்டனா். அவா்களுடைய பணி என்பது வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருப்பவா்களைக் கண்டறிந்து, அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், வீதிதோறும் கொசு மருந்து அடித்தல், கொசுவால் உண்டாகும் நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்றவையாகும். கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பணியையும் அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா். சுமாா் 17 ஆண்டுகளாக கொசு ஒழிப்பு களப்பணியில் ஈடுபட்டு வரும் அவா்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில், ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்படும் ஊதியம்கூட அவா்களுக்கு வழங்கப்படவில்லை என்கிற புகாா்களும் வருகின்றன.

எனவே, அவா்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT