தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2-ஆம் இடம்: நாமக்கல் அரசு ஊழியர் சாதனை

23rd May 2023 04:15 PM

ADVERTISEMENT

நாமக்கல்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஆர். ராமகிருஷ்ணன் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி தம்பதியர் மகன் ராமகிருஷ்ணன்(28). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் 2016-இல் முடித்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, 2019-இல் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தப்பட்டார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வந்தார். முதல் மூன்று தேர்வுகளில் தோல்வி அடைந்தபோதும் விடாமுயற்சியின் காரணமாக 2022-இல்  நான்காவது முறையாக எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில் 117-ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் ராமகிருஷ்ணன் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தற்போது இந்த சாதனையை எட்டியுள்ளார். அவருக்கு மாவட்ட தொழில் மையம் சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT