தமிழ்நாடு

கருமுத்து கண்ணன் காலமானார்

DIN

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்  கருமுத்து கண்ணன்(70) இன்று(மே.23) காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன் இன்று காலமானார். இவருக்கு மனைவி, தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் ஹரி தியாகராஜன் என்ற மகனும் உள்ளனர் .

இவரது இறுதிச் சடங்குகள் மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது.

கருமுத்து கண்ணன் 15 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்தார். மேலும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயக்குநராகவும்  இருந்து வந்தார்.  

கருமுத்து கண்ணனின் மறைவுக்கு மதுரை நகரத்தார் சங்கம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது.

ஆளுநர், முதல்வர் இரங்கல்
சென்னை, மே 23: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு மிகுந்த வேதனை தருகிறது. சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்துக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக மீதும், எங்களது குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் கருமுத்து கண்ணன். தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயக்குநராகப் பொறுப்பு வகித்து பல ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவி செய்த மனிதநேயப் பண்பாளர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்காராக பல ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு புனரமைப்புப் பணிகளைச் செய்தவர். மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தொழில் துறை, கல்வித் துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கு உதவிகளைச் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கருமுத்து கண்ணன். அவரது மறைவு பேரிழப்பு. மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக):
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்காராக பல்வேறு ஆன்மிக பணிகளைச் செய்தவரும், மதுரையின் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவருமான கருமுத்து கண்ணன் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): தலைசிறந்த கல்வியாளரும், ஆற்றல்மிகு தொழிலதிபரும், ஆன்மிகவாதியுமான கருமுத்து கண்ணன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல்.
கே.அண்ணாமலை (பாஜக): சிறந்த பண்பாளரான கருமுத்து கண்ணன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
ராமதாஸ் (பாமக): கருமுத்து கண்ணன் அவரது குடும்ப மரபுவழியின்படி கல்விக்கும், ஆன்மிகத்துக்கும் தொண்டாற்றி வந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
டிடிவி தினகரன் (அமமுக): கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்த கருமுத்து கண்ணன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன்:
கருமுத்து கண்ணனின் இழப்பால் மிகவும் வருந்துகிறேன். ஆழ்ந்த சிந்தனையாளராக இருந்த அவர், புத்திசாலித்தனமான ஆலோசனைகளை வழங்கி வந்தார். பல்வேறு கடினமான சூழல்களிலும் எங்களை வழிநடத்தி சர்வதேச அளவில் சிறந்த நிறுவனமாக மாற்றும் பயணத்தில் அவர் எங்களுக்கு உதவினார்.
டஃபே (டிஏஎப்இ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மல்லிகா ஸ்ரீனிவாசன்: கருமுத்து கண்ணன் ஒரு தொலைநோக்கு தலைவராகவும், மதிப்புமிக்க தொழிலதிபராகவும் செயல்பட்டவர். நுண்ணறிவு, தொலைநோக்கு அணுகுமுறை உள்ளிட்டவற்றால் தென்னிந்திய ஜவுளித் தொழிலின் திசையை மாற்றியமைத்தவர். சிறந்த கொடையாளராகவும், கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பவராகவும் இருந்தார் என்பதற்கு அவர் வளர்த்த கல்வி நிறுவனங்கள் சான்றாக இருக்கிறது.
விஐடி பல்கலைக்கழக வேந்தர்- தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவர் கோ.விசுவநாதன்: உலகத் தமிழர்களை ஒரு குடையின்கீழ் இணைக்கும் தமிழியக்கத்தின் துணைத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் மறைவுற்றார் என்ற செய்தி தமிழ் உள்ளங்களில் இடியாய் இறங்கியுள்ளது. எண்ணற்ற இளைஞர்கள் வாழ்வில் கல்வியாலும், அதன் வாயிலாகப் பெற்ற பணி வாய்ப்புகளாலும் ஒளியேற்றியவர்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக அரும்பெரும் பணிகளை ஆற்றியதோடு, அந்தக் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்திய தலைசிறந்த ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தவர் கருமுத்து தி.கண்ணன். மேலும், கடைக்கோடி மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற கல்வி வளர்ச்சிப் பணிகள், தொழில் மேம்பாட்டுப் பணிகள் ஆற்றிய சமூகச் சிந்தனையாளர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT