தமிழ்நாடு

தினமணி முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் 89 வது பிறந்த நாள் விழா

23rd May 2023 02:48 PM

ADVERTISEMENT

சிவகங்கை: தமிழக அரசு பொது நூலகத் துறை மற்றும் சோமலெ அறக்கட்டளை இணைந்து  தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே  நெற்குப்பையில் உள்ள சோமலெ நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட நூலக  அலுவலர் தே. ஜான் ஜாமுவேல் தலைமை வகித்தார்.

இதில், காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவர் கம்பன் அடிபொடி பழ.பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

நெற்குப்பைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. மாவட்ட வாரியாக வரலாறுகள் மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, தொழில் வாய்ப்புகள் குறித்து பதிவு செய்த சோமலெ இந்த மண்ணில் பிறந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணங்களை இன்றைய இளம் தலைமுறையினர் எளிய முறையில் அறியும் வண்ணம் பல்வேறு நூல்களை இயற்றிய தமிழண்ணல் பிறந்த ஊர். 

ADVERTISEMENT

அடுத்ததாக பத்திரிக்கைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்த ராம. திரு. சம்பந்தம் பிறந்த ஊர் நெற்குப்பை. இவர் எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டது கிடையாது. செயலில் தனது பணி மேம்பட வேண்டும் என எண்ணியவர். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர். 

இன்றைய இளம் தலைமுறையினர் பொழுதுபோக்குக்காக இணையங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு தரவுகள் இணையத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அனைவருக்கும் திறமை உண்டு. அதனை வெளிப்படுத்த கல்வி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பாடத்தைத் தாண்டி பிற துறை நூல்களையும் தேடிப்படிக்க வேண்டும். அப்போது சாதனையாளராக மாற முடியும் என்றார் அவர்.

விழாவில், மதுரை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் அழ.சோமசுந்தரம் பேசியதாவது: 

அர்ப்பணிப்பு, எளிமைக்கு உதாரணம் ராம.திரு.சம்பந்தம் தான். மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார் அவர். 

முன்னதாக, தினமணி முன்னாள் ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்ட நூலகத் துறை ஆய்வாளர் எஸ். சண்முகசுந்தரம், திருப்பத்தூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க: நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம்!

முன்னதாக, சோமலெ நினைவு கிளை நூலகத்தின் நூலகர் மீ.அகிலா வரவேற்றார். வ.செ.சிவலிங்கம் அரசுக் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ச.முருகேசன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT