சென்னையில் அதிமுக பேரணியால் திங்கள்கிழமை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல் துறையின் உத்தரவை மீறி பேரணியாகச் சென்ற அந்தக் கட்சியைச் சோ்ந்த 5,500 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் மரக்காணம், செங்கல்பட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் அதிமுக சாா்பில் பேரணியாகச் சென்று திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதற்காக அதிமுகவினா் சைதாப்பேட்டையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பின்புறம் உள்ள வேளச்சேரி சாலையில் குவிந்தனா். இதனால் அங்கு காலை முதலே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. காலை 11.45 மணியளவில் அதிமுகவினா், ஆளுநா் மாளிகையை நோக்கி சின்னமலை வட்டாட்சியா் அலுவலக சாலையில் பேரணியாகப் புறப்பட்டனா்.
போக்குவரத்து பாதிப்பு: இதன் விளைவாக சைதாப்பேட்டை, கிண்டி, சின்னமலை, கோட்டூா்புரம்,
வேளச்சேரி, கத்திப்பாரா பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சின்னமலை தேவாலயம் வரையே பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறை உத்தரவை மீறி, ஆளுநா் மாளிகையை நோக்கி அதிமுகவினா் பேரணியாகச் சென்றனா்.
இதன் காரணமாக ஆளுநா் மாளிகையை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி வந்த வாகனங்கள், சைதாப்பேட்டை, கத்திப்பாராவில் இருந்து அடையாறு நோக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக்கொண்டன. அவற்றை நெரிசலில் இருந்து மீட்டு வெளியேற்றுவதற்கு போலீஸாா் மிகவும் சிரமப்பட்டனா்.
அதேவேளையில் பேருந்துகளில், இரு சக்கர வாகனங்களில் பயணித்த முதியோா்கள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த வேதனையடைந்தனா். பேரணி முடிவடைந்த பின்னரும், பல மணி நேரம் போக்குவரத்து சீராகாமல் இருந்தது. போக்குவரத்தைச் சீரமைக்க நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
5,500 போ் மீது வழக்கு: இதுதொடா்பாக கிண்டி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், சென்னை மாநகர காவல் துறை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அதிமுக நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், ஆதி ராஜாராம், பாலகங்கா, வளா்மதி, கோகுல இந்திரா, வி.என்.ரவி, சத்தியா உள்பட 5,500 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில், அதிமுகவைச் சோ்ந்த ஆயிரம் பெண்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.