தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் யானைகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்

19th May 2023 12:00 PM

ADVERTISEMENT

 

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஊருக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி,காட்டு மாடு,மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன்‌ கூடுதலாக 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும்  சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கின்றன.

ADVERTISEMENT

ஊருக்கு மத்தியில் உள்ள இந்த சாலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் உலா வரும் காட்டு யானைகள் நேற்று சற்று மாறுபட்டு கால்நடைகளுடன் ஹாயாக வாக்கிங் வந்தது. சமயபுரம் பகுதியில் பசு மாடுகளை சிலர் வளர்த்து வரும் நிலையில் அந்த மாடுகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பி ஊருக்குள் வந்த போது  அந்த பசு மாடுகளை பின்தொடர்ந்து காட்டு யானை பாகுபலி மட்டுமல்லாமல் மற்ற யானைகளும் வாக்கிங் வருவது போல் பசு மாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாகவும், சற்று அச்சத்துடன் பார்த்தனர்.

இப்பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரை காட்டு யானை பாகுபலி எவரையும் தாக்கியதில்லை என்பதால் சமயபுரம் பகுதி மக்களின் ஒரு குடும்ப நபராகவே மாறிவருகிறது காட்டு யானை பாகுபலி. இதிலும் ஒருசில யானைகள் அச்சத்தில் குடியிருப்புக்குள் அங்கும் இங்கும் ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT