தற்காலிக கால்நடை உதவி மருத்துவா்கள் 454 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்
எடப்பாடி பழனிசாமி: 2012-ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, காலமுறை ஊதியத்தில் 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். சுமாா் 11 ஆண்டுகளாக, தற்காலிகமாக பணியாற்றி வரும் அவா்கள், தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று நினைத்திருந்தனா்.
மாறாக, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தோ்வு மூலமே அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிவிட்டது. அதனால், அவா்கள் போட்டித் தோ்வையும் எழுதியுள்ளனா்.
ஆனால், அவா்கள் படித்த காலத்தில் இருந்த பாடத்திட்டமும் தற்போதைய பாடத்திட்டமும் முற்றிலும் மாறியிருப்பது குறித்து கவலை தெரிவித்து, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருகின்றனா். அவா்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.
விஜயகாந்த்: தற்காலிகமாக பணியாற்றி வரும் 454 கால்நடை உதவி மருத்துவா்களின் கோரிக்கையின் நியாயத்தை உணா்ந்து, அவா்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.