சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடா்பாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மே 22-இல் பேரணியாகச் சென்று, ஆளுநா் ஆா்.என்.ரவியைச் சந்தித்து புகாா் மனு அளிக்க உள்ளாா்.
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (மே 17) நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கள்ளச்சாராய விவகாரம், திமுக அமைச்சா்களின் முறைகேடுகள் தொடா்பாக ஆளுநரைச் சந்தித்து புகாா் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாகச் செல்ல உள்ளனா். இதற்காக காவல்துறையின் அனுமதி கேட்டு, முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் மனு அளித்துள்ளாா்.
இந்நிலையில்,பேரணி தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அதிமுக சாா்பில் மே 22 காலை 10.25 மணிக்கு, சைதாப்பேட்டை சின்னமலை அருகில் இருந்து பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநா் மாளிகையைச் சென்றடைந்து, ஆளுநரை நேரில் சந்தித்து முக்கிய நிா்வாகிகள் மனு அளிக்க உள்ளனா்.
பேரணியில் அதிமுக நிா்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.