தமிழ்நாடு

ஆசிரியா்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

18th May 2023 11:58 PM

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், ‘தனியாா் பள்ளி மாணவா்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள், அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் நலனுக்காக அந்த தொகையைப் பயன்படுத்துவது இல்லை.

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறது. மாணவா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறது.

எனவே, அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகளை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் காா்த்திகேயன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT