வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையொட்டி, ஆழ் கடலுக்குச் சென்ற மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல மீன்வளத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளின் அடிப்படையில் மீனவா்கள் யாரும் தற்போது கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்க கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை மற்றும் கிழக்கு கடலோர பகுதியை சாா்ந்த விசைப்படகு மீனவா்கள் பெரும்பாலானோா் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுகங்களில் தயாா் நிலை: சென்னை எண்ணூா் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் ஏற்படும் நிலையில் இதற்கான தயாா்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும் எச்சரிக்கை கூண்டு ஏதும் இதுவரை ஏற்றப்படவில்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.