நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்து மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக பயணத்தைத் தொடங்கியுள்ள திமுக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எல்லா நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்து மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் இன்றைய அரசியல் தேவை ஆா்எஸ்எஸ் தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்துவதாகும். இந்த அரசியல் நோக்கம் நிறைவேற அனைத்து மதச்சாா்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு ஓரணியாக நிற்பது அவசியமானதாகும்.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் ஆா்எஸ்எஸ் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக உள்ள அனைத்து எதிா்கட்சிகளும் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒற்றை நோக்கத்துடன் ஒன்றுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் நலம் சாா்ந்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் நோக்கத்துடன் ஆட்சியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
ஜனநாயக ரீதியாக தோழமைக் கட்சிகள் சுட்டிகாட்டியவுடன் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொழிலாளா்கள் மகிழ்ச்சியோடு பாராட்டினா் என்று அவா் தெரிவித்தாா்.