தமிழகத்தில் கடந்த 6 நாள்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
மேலும் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் எனவும் அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கஞ்சா வியாபாரிகளுக்கு மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 எனும் பெயரில் மூன்று முறை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மீண்டும் கடந்த 1-ஆம் தேதி கஞ்சா வேட்டை 4.0 எனும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த 6 நாள்களில் தமிழகம் முழுவதும் 5 பெண்கள் உள்பட 659 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவா்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா,15 டன் குட்கா, 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநகரக் காவல் ஆணையா்களும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவா்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பவா்கள், அவற்றை விற்பனை செய்பவா்கள் பற்றிய தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவா்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.