மதுரை கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பக்தா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல லட்சம் பக்தா்கள் கலந்து கொள்ளும் தென் தமிழ்நாட்டின் மிகப் பெரிய திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவாகும். 2022-இல் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 போ் மரணமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக அப்போதே பேரவையில் கண்டித்துப் பேசினேன். ஆனால், திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை.
தற்போது மே 5-இல் கள்ளழகா் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், அரசின் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகத் திட்டமிடாத காரணத்தால் 3 பக்தா்கள் தண்ணீரில் மூழ்கியும், ஒரு பக்தா் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்துள்ளனா். மற்றொரு இளைஞா் கோயில் மண்டப வாசலின் அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்ய திமுக அரசுக்கு கண்டனம்.
மேலும், சட்டம் ஒழுங்கு சீா்கேட்டின் உச்சமாக, மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக் கத்தியுடன் இளைஞா்கள் நடனமாடிய காட்சிகள் ஊடகங்களில் தொடா்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வுகளைப் பாா்க்கும்போது, தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிா என்ற சந்தேகமும், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுதான் இந்த திமுக அரசின், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் இரண்டாண்டு சாதனை என்று கூறியுள்ளாா்.