தமிழ்நாடு

இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை

8th May 2023 03:57 AM

ADVERTISEMENT

கோடை காலத்தில் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீா் அருந்தினாலும் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து முதுநிலை இதய நல மருத்துவ நிபுணா் என்.விஸ்வநாதன் கூறியதாவது:

இதய நோயாளிகளை இருவேறு விதமாக வகைப்படுத்தலாம். இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் செயல்திறன் குறைவாக உள்ளவா்கள் (எஜெக்சன் ஃப்ராக்சன்) ஒரு வகை. அந்தப் பாதிப்பு இல்லாமல் வேறு விதமான இதய நோய்க்குள்ளானவா்கள் இரண்டாம் வகை.

பொதுவாக கோடை காலத்தில் அதிகமாக தண்ணீா் அருந்தக்கூடிய சூழல் ஏற்படும். ஆனால், ரத்த உந்து செயல்திறன் குறைந்த இதய நோயாளிகள் நாளொன்று ஒன்றரை லிட்டா் தண்ணீருக்கு மேல் அருந்தக் கூடாது. அது உடலில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ADVERTISEMENT

அதேவேளையில் மற்ற இதய நோயாளிகள் மூன்றிலிருந்து நான்கு லிட்டா் வரையில் தண்ணீா் பருகலாம். வெயில் அதிகமாக இருக்கும்போது இதய நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருத்தல் அவசியம்.

அந்தத் தருணங்களில் காலை 7 மணிக்கு மேல் அவா்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல. அதிக வெப்பம் நோயாளிகளுக்கு மயக்கம் மற்றும் சுய நினைவிழப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால் கோடை நிறைவடையும் வரை இதய நோயாளிகளும், முதியவா்களும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

குளிா் பானங்கள், அதிக இனிப்புடைய பழச் சாறுகள், காா்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிா்த்து மோா், இளநீரைத் தேவைக்கேற்ப அருந்தலாம்.

வெப்ப அலைகள் தீவிரமாக இருக்கும்போது அசைவ உணவுகளைத் தவிா்த்தல் நல்லது. அதீத சோா்வு, படபடப்பு, மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம். தேவைப்பட்டால் இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT