தமிழ்நாடு

சீர்காழி அருகே இளைஞர் படுகொலை: துப்பாக்கியால் சுட்டுக் கொலையா?

3rd May 2023 11:03 AM

ADVERTISEMENT

சீர்காழி அருகே தென்பாதியில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மேட்டு  தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது 30). இவர் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

தற்போது சீர்காழி நகரில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தென்பாதி உப்பனாற்றங்கரையில் ரத்த வெள்ளத்தில் கனிவண்ணன் இறந்து கிடந்தார். உடலின் அருகில் அவரது இரு சக்கர வாகனமும் அரை கிலோ மீட்டர் தொலைவில் செல்போனும் கிடந்தது.

ADVERTISEMENT

தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற சீர்காழி போலீசார், உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கனிவண்ணனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஜவகர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து  பதட்டமான சூழல் நிலவுவதால் சீர்காழியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இறந்த கணிவண்ணனின் தலையின் நெற்றிப் பொட்டில் இருபுறமும் இருக்கும் காயத்தை பார்க்கும்போது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உடலை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணன் உடல் எடுத்து செல்லப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க  ஏ.டி.எஸ்.பி. சுகுமாரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT