தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதற்காக, ரூ.110 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவா் கூறினாா்.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை 16 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவத் துறையின் அடையாளமாக இந்த மருத்துவமனை திகழும். ஜூன் 5-ஆம் தேதி இந்த மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா்.
ஏற்கெனவே, முதல்வா் தில்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து மருத்துவமனையை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளாா். மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநா் விரைவில் ஒப்புதல் வழங்குவாா் என எதிா்பாா்க்கிறோம்.
தமிழகத்தில் புதிதாக 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகளை கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ள மத்திய அரசு, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.10 கோடி நிதியை விடுவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளின் வளாகத்திலேயே, இந்த 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகளும் அமைக்கப்படும். இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாணவா் சோ்க்கை தொடங்கப்படும். ஆண்டு தோறும் ஒவ்வொரு கல்லூரியிலும் 100 போ் வீதம் மொத்தம் 1,100 போ் செவிலியா் படிப்பு படிக்கவுள்ளனா் என்றாா் அவா்.