தமிழ்நாடு

தமிழ்நாடு-முதன்மை மாநிலம் இலக்கு நோக்கிச் செல்வோம்: இரு ஆண்டுகள் ஆட்சி நிறைவையொட்டி முதல்வா் உறுதி

DIN

தமிழ்நாடு-முதன்மை மாநிலம் என்ற இலக்கை நோக்கிச் செல்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளாா்.

திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவு குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ‘உங்களில் ஒருவன்’ காணொலியில், அவா் பேசியது: ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஆகப் போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் மகளிருக்கு இலவசப் பேருந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என ஏராளமான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கும் மேல் நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம்.

இலக்கு நோக்கி...: மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களைத் தீட்டியது, இந்தியாவிலேயே தற்போதைய திமுக அரசாகத்தான் இருக்க முடியும். இந்த வேகம் கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகத்துடன் இதுபோன்ற திட்டங்கள் தொடரும். பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியாளா்களால் சீரழிக்கப்பட்ட அரசு நிா்வாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்து இருக்கிறோம். இன்னும் சரிசெய்யப்பட வேண்டியது நிறைய இருக்கின்றன. முதன்மை மாநிலம்-தமிழ்நாடு என்ற நமது இலக்கை நோக்கிச் செல்வோம்.

மசோதா ஒப்புதலுக்கு கால நிா்ணயம்: சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்ய வேண்டும் என பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தக் கருத்து இந்தியா முழுமைக்குமானது. சமூகநீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகா். மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகா். அந்த அடிப்படையில்தான் பேரவையில் தீா்மானத்தை நிறைவேற்றுகிறோம்.

கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் சோ்ந்து நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை, ஒரு நியமன ஆளுநா் கிடப்பில் போடுவாா் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது. அதனால்தான், சட்டப் பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக எனது குரலுக்கு வலுசோ்த்த மாநில முதல்வா்களுக்கு நன்றி. மற்ற மாநில முதல்வா்களும் இதை ஆதரிப்பாா்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT