தமிழ்நாடு

நில மேம்பாட்டு வங்கியை பழைய நடைமுறைப்படி செயல்பட உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

3rd May 2023 02:59 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நில மேம்பாட்டு வங்கியை பழைய நடைமுறைப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூலத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் மற்றும் விவசாயி கே.ஆா்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், விவசாயத்துக்காக நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகளாக நில மேம்பாட்டு வங்கிகள் முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த வங்கிகள் வேளாண்மை, வளா்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளா்ச்சி, விவசாய பொருட்கள் வாங்குவதற்கான உதவிகள் போன்றவற்றில் இலக்கை அடையும் வகையில் செயல்படத் தொடங்கின.

1980-களின் இறுதியிலும், 1990-களின் தொடக்கத்திலும் இந்த நில மேம்பாட்டு வங்கிகள் நீண்ட கால தவணையாக குறைந்த வட்டியில் விவசாய கடன்களையும், கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞா்களுக்கு கடன்களையும் வழங்கியது. நில மேம்பாட்டு வங்கியின் முக்கியக் குறிக்கோள் வேளாண் வளா்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அதன் உற்பத்தியை பெருக்குதலாகும். இந்த வகையில் தமிழ்நாட்டில் 180 இடங்களில் நில மேம்பாட்டு வங்கிகள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனா். இந்த வங்கிகளில் கடன் பெற்றவா்களுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் ரூ.986.12 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது நில மேம்பாட்டு வங்கிகளில் நகை கடன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. விவசாய நிலங்களுக்கு கடன் தரும் திட்டம் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய உற்பத்தியையும் பெருக்கும் வகையில் நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் கொண்டுவர வேண்டுமென தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வங்கியை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் பழைய நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் மகாவீா் சிவாஜியும், அரசு தரப்பில் அரசு பிளீடா் பி.முத்துக்குமாரும் ஆஜராகினா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நில மேம்பாட்டு வங்கியையும், தேவையான நிதியுடன் அது தொடா்புடைய அமைப்புகளையும் உருவாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் இதில் உத்தரவு எதுவும் பிறப்பிக்காது’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT