தமிழ்நாடு

ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் விபத்து: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

3rd May 2023 10:28 AM

ADVERTISEMENT

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் இன்று அதிகாலை மீண்டும்  ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரதான சாலையில் தற்போது பராமரிப்பு நடந்து கொண்டிருப்பதால் அனைத்து கனரக வாகனங்களும் அயோத்தியா பட்டணத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு சென்று வருகிறது.

இதனால் அயோத்தியாப்பட்டினம், குப்பனூர் சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை ஏற்காடு வாழவந்திப் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஒலிபெருக்கி உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மலைப்பாதை வளைவில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியில் வந்த ஐந்து பேரில், முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேலும் சாலையோரத்தில் கொட்டிக் கிடந்த ஒலிபெருக்கி சாதனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டினர்.

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Yercaud salem
ADVERTISEMENT
ADVERTISEMENT