குமாரபாளையத்தில் காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற இரு மாணவா்கள் தண்ணீரில் மூழ்கியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
குமாரபாளையம், ஓடக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரின் மகன் தனுஷ் (17). பிளஸ் 2 வகுப்பு படித்துள்ளாா். நாராயண நகரைச் சோ்ந்த சண்முகத்தின் மகன் கனிஷ்கரன் (18). பட்டயக் கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். நண்பா்களான இருவரும் காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றனா். கனிஷ்கரனுக்கு நீச்சல் தெரியாததால், தனுஷ் நீச்சல் கற்றுக் கொடுத்தாா்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதியில் குளித்தவா்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ்.ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் மீனவா்கள் உதவியுடன் இருவரின் சடலத்தையும் மீட்டனா்.
இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.