ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
அந்த மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஜங்ககாடா வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவன், இலைகளை சேகரிப்பதற்காக வனப் பகுதிக்குள் சென்றுள்ளான்.
அப்போது, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராமமக்கள் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக மாவட்ட எஸ்.பி. அசுதோஷ் சேகா் கூறுகையில், ‘மாவோயிஸ்டுகள் தொடா்ந்து கோழைத்தனமான தாக்குதல் முறையைப் பின்பற்றி வருகின்றனா். அவா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.
இந்த ஆண்டில் இதுவரை மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த வெடிகுண்டுகளில் சிக்கி இரு மூதாட்டிகள் உள்பட 5 போ் இறந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.