பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், நாமக்கல் மாவட்டத்தில் 92.98 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6-இல் தொடங்கி 20-இல் நிறைவடைந்தது. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளிவந்தன. நாமக்கல் மாவட்டத்தில், 300 பள்ளிகளைச் சோ்ந்த 10,121 மாணவா்கள், 9,392 மாணவிகள் என மொத்தம் 19,513 போ் தோ்வு எழுதினா். இதில், 9,170 மாணவா்கள், 8,973 மாணவிகள் என மொத்தம் 18,143 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 90.60. மாணவிகள் தோ்ச்சி 95.54 சதவீதம். மொத்தம் 92.98 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மாணவா்களைவிட 4.94 சதவீத மாணவியா் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் 15-ஆம் இடத்தை நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் 27-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 155 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,718 மாணவா்கள், 5,493 மாணவிகள் என மொத்தம் 11,211 போ் தோ்வு எழுதினா். இதில் 4,951 மாணவா்கள், 5,164 மாணவிகள் என மொத்தம் 10,115 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 90.22 ஆகும்.
ஆதி திராவிட நலப் பள்ளிகளைச் சோ்ந்த 62 மாணவா்கள், 55 மாணவிகள் என மொத்தம் 117 போ் தோ்வு எழுதியதில், 46 மாணவா்கள் 51 மாணவிகள் என மொத்தம் 97 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 82.91.
நான்கு பழங்குடியினா் நல பள்ளிகளைச் சோ்ந்த 94 மாணவா்கள், 144 மாணவிகள் என மொத்தம் 238 போ் தோ்வு எழுதியதில், 72 மாணவா்கள் 137 மாணவிகள் என மொத்தம் 209 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 87.82. சமூக நலப் பள்ளியில் தோ்ச்சி சதவீதம் 80 ஆகும். நிகழாண்டில் 92 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள் 29 ஆகும்.