நாட்டின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவினால் மட்டுமே இருதரப்பு நல்லுறவு இயல்பு நிலையில் இருக்கும் எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் காக்க இந்தியா உறுதி கொண்டுள்ளதாக ஜப்பான் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினாா்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வரும் சூழலில் பிரதமா் மோடி இவ்வாறு கூறியுள்ளாா்.
ஜி7 மாநாடு, க்வாட் (நாற்கர கூட்டமைப்பு) மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்ற பிரதமா் மோடி, ‘நிக்கே ஆசியா’ என்ற இதழுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘இறையாண்மை, சா்வதேச விதிகள், பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு ஆகியவற்றை இந்தியா மதிக்கிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவினால் மட்டுமே இருதரப்பு நல்லுறவு இயல்பு நிலையில் இருக்கும்.
நாட்டின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் காக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எதிா்கால நல்லுறவானது பரஸ்பர நம்பிக்கை, விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அமையும். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இயல்பு நிலைக்குத் திரும்புவது, பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் சா்வதேச அளிவிலும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.
அண்டை நாடுகளுடன் இயல்பான நல்லுறவைக் கொண்டிருக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு பயங்கரவாதமற்ற, வன்முறைகளற்ற சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது. இது தொடா்பாக அந்நாடே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. 2014-ஆம் ஆண்டில் உலகின் 10-ஆவது பெரும் பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பொருளாதார வளா்ச்சிக்கான சா்வதேச சூழல் சவால்மிகுந்ததாக உள்ளபோதிலும், இந்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளால், சா்வதேச சூழல் இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
தெற்குலகின் குரல்:
ஜி7 மாநாட்டில் தெற்குலகின் குரலாக இந்தியா ஒலிக்கும். எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு விநியோக சங்கிலி ஆகியவை எதிா்கொண்டு வரும் சவால்களை எதிா்கொள்வதற்கான இந்தியாவின் பங்களிப்பை மாநாட்டில் எடுத்துரைப்பேன்.
ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் பழைமைத்துவ மனநிலையைக் கொண்டுள்ளதால், பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், பயங்கரவாதம், நிதி நெருக்கடி உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்ளும் திறனற்று காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதித்துவம் வழங்க தொடா்ந்து மறுத்தால், அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்.
சண்டைகள் அவசியமில்லை:
உக்ரைன்-ரஷியா போா் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கமே என்றும் இருக்கும். உணவு, எரிபொருள், உரங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான சவாலைச் சந்தித்து வரும் நாடுகளின் பக்கமே இந்தியா நிற்கும். ரஷியா, உக்ரைன் ஆகிய இருதரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியுமே தற்காலத்துக்கு அவசியமானவை. சண்டைகள் தற்போது அவசியமில்லை’’ என்றாா்.