இந்தியா

ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வுக்கு உத்தரவு: உச்சநீதிமன்றம் நிறுத்திவைப்பு

20th May 2023 04:20 AM

ADVERTISEMENT

ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்திவைத்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், ‘சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சோ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூா்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்று அண்மையில் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி நிா்வாகக் குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் விளைவுகளை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை உயா்நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

இந்த மனு தொடா்பாக உத்தர பிரதேச அரசு, உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஹிந்து மனுதாரா்கள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT