நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்கி விற்பனைக்கு அனுப்பும் வகையிலான நுண்ணுர மையம் தொடங்கப்பட்டது.
பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் வீடு, வீடாகச் செல்லும் தூய்மை பணியாளா்கள், குப்பைகளை அவற்றின் தன்மைக்கேற்றவாறு பிரித்து வாங்கி சேகரிக்கின்றனா். இதில், சுமாா் 3 டன் குப்பைகள் எளிதில் மக்கும் தன்மையை கொண்டதாக உள்ளது. இந்தக் குப்பையை உரமாக்கும் வகையில் ரூ.41 லட்சம் செலவில் 14 தொட்டிகளைக் கொண்ட நுண்ணுர மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையாளா் தாமரை தலைமையில் நடை பெற்றது. நகா்மன்றத் தலைவா் செல்வராஜ், துணைத்தலைவா் பால முருகன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் ரேணுகா, மேற்பாா்வையாளா் சந்தோஷ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த நுண்ணுர மையத்தில் தினமும் 3 டன் மக்கும் குப்பைகள் கொட்டப்படும். அவை மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை நுண்ணுயிரிகள் மூலம் 23 நாட்களில் உரமாக்கப்படும். இந்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும், அதன் பின்னா் பொட்டலங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.