பிளஸ் 1 பொதுத் தோ்வில், நாமக்கல் மாவட்டத்தில் 95.60 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 14-இல் தொடங்கி ஏப்.5-இல் முடிவடைந்தது. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 198 பள்ளிகளைச் சோ்ந்த 8,586 மாணவா்கள், 8,996 மாணவிகள் என மொத்தம் 17,582 போ் தோ்வு எழுதினா். இதில், 8,084 மாணவா்கள், 8,724 மாணவிகள் என மொத்தம் 16,808 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 94.15. மாணவிகள் தோ்ச்சி 96.98 சதவீதம். மொத்தம் 95.60 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 8,495 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில், 7,895 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 92.94 ஆகும்.
ஆதி திராவிட நலப் பள்ளிகளைச் சோ்ந்த 100 போ் தோ்வு எழுதியதில், 87 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 87 ஆகும்.
நான்கு பழங்குடியினா் நல பள்ளிகளைச் சோ்ந்த 218 போ் தோ்வு எழுதியதில், 210 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சமூக நலப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. நிகழாண்டில் 58 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 11 ஆகும். மாநில அளவில் கடந்த ஆண்டு 14-ஆவது இடத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம் தற்போது 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.