தமிழ்நாடு

அமைச்சரவையை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கொடுத்து யார்? - ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்

30th Jun 2023 11:42 AM

ADVERTISEMENT


வேலூர்: அமைச்சரவையை அமைக்கும் அதிகாரம் எந்த காலகட்டத்திலும் ஆளுநருக்கு கிடையாது. அரசாங்கத்தை பாதுகாக்கிற காவலரான ஆளுநரை பார்த்து கேட்கிறேன், எந்த அடிப்படையில் தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதாக உத்தரவிட்டீர்கள்?, இதுபோன்று உத்தரவிடுவதற்கு நீங்கள் யார்? என ஆளுநர் மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம் வைத்துள்ளார். 

வேலூர் மாநகர திமுக மற்றும் வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், காமராஜர் பிரதமர் ஆவதை நாங்கள் தடுத்து விட்டோம் என பாஜகவினர் கூறுகிறார்கள். காமராஜருக்கு திமுகவினர் செய்தது போல காங்கிரஸ்காரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள். காமராஜர் இறந்த பிறகு அவரது உடலை நல்லடக்கம் செய்வது குறித்து கருணாநிதி காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேசினார். அப்போது காங்கிரஸ் கோஷ்டியினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்தை முன் வைத்தார்கள். ஆனால் காமராஜர் உடலை அரசு மரியாதையோடு ராஜாஜி ஹாலில் வைத்து காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்தவர் கருணாநிதி. 

காமராஜர் குறித்து பேசுவதற்கு அமித்ஷாவுக்கு தகுதி இல்லை. ஆனால் எனக்கு உண்டு. ஏன்னா நான் அப்போது 10 ஆம் வகுப்பு படித்து வந்தேன். அமித்ஷா ஒரு கை குழந்தை. காமரஜர் பிரதமர் ஆவதை நாங்கள் தான் தடுத்ததாக வேலூரில் அமித்ஷா கையிறு திரித்துவிட்டு சென்றிருக்கிறார். 

ADVERTISEMENT

வேலூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில் 2ஜி, 3ஜி, 4ஜி என பேசி இருக்கிறார். ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

எந்த ஜியாலும் எங்கள் தூசியைக் கூட தொட முடியாது. 2ஜியில் உங்களால் நிருபிக்க முடிந்ததா? நீதிமன்றமே உங்களை கண்டித்தது.

திமுகவுக்கு ஓட்டு போட்டால் கருணாநிதி குடும்பம் தான் வாழ முடியும் என குடும்ப அரசியல் குறித்து மோடி பேசியுள்ளார். மோடி உயிரோடு வாழ வேண்டும் என்றால் எங்களை பற்றியும், குடும்ப அரசியல் பற்றியும் பேசிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏன்னா எங்களை பார்த்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என கூறியவர்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம்.

சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யாரை அமைச்சராக நியமிக்கிறாரோ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. அமைச்சரவையில் ஒருவரை அமைச்சராக்குவதும், அமைச்சரவையில் இருந்து நீக்குவதும் ஒரு மாநில முதல்வரின் பணி, ஆனால் இன்றைக்கு அதிக பிரசிங்கத்தனமாக ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

செந்தில்பாலாஜி மீது வழக்கு எப்போது போடப்பட்டது. இத்தனை காலம் நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க?, உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததை செந்தில் பாலாஜி தப்பு பண்ணதாக ஆளுநர் சொல்கிறார்.

இதுபோன்ற வாய்கொழுப்பால் தான் ஜெயலலிதா நான் போட்ட டான்சி வழக்கில் சிறைக்கு போனார்.

அமித்ஷாவின் முகவராக செயல்படுபவர் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குடும்பம் நடத்தியவர்களுக்குத்தான் குடும்பம் பற்றி தெரியும். மனைவியால் கைவிடப்பட்ட மோடி போன்றவர்களுக்கு குடும்பம் பற்றி எதுவும் தெரியாது என நாங்கள் கேட்டால் எப்படி இருக்கும்? இந்த நிலைக்கு எங்களை பேச வைத்துவிட்டீர்கள்.

இதையும் படிக்க | அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்: ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மோடியின் மனைவியை போலீஸ் பாதுகாப்போடு தனியாக வைத்துள்ளீர்கள் ஏன்? என்ன காரணம்? இதையெல்லாம் அரசியலில் பேச ஆரம்பித்தால் வேறு மாதிரியாக போய்விடும். நாகரீமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். 

ஆளுநருக்கு சொல்லிக் கொள்கிறேன், திமுகவின் சட்டத்துறை பற்றி உங்களுக்கு தெரியாது. போட்ட அத்தனை வழக்கிலும் வென்றவர்கள் திமுகவினர்.

இதயம்  இல்லாத ஓர் ஆள் யார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்காமல் அலைக்கழித்து அரசு வழக்குரைஞரை விட்டுவிட்டு தனியாக அதிக பணம் கொடுத்து பிரத்தியோக வழக்குரைஞர்களை வைத்து வாதாடியவர் பழனிசாமி. கருணாநிதிக்கு இடம் கிடைத்தது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நடந்தது யாருக்கும் தெரியாது. கருணாநிதிக்கு இடம் பெறுவதை  ஒரே இரவில் நீதிமன்றம் சென்று வாங்கியவர்கள் நாங்கள். இதெல்லாம் ஆளுநர் ரவிக்கு தெரியாது. 

ஆளுநரை பார்த்து கேட்கிறேன். எந்த அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக அறிக்கை அளித்தீர்கள்? அமைச்சரவையில் அமைச்சரை நீக்குவதற்கு நீங்கள் யார்?. அரசாங்கத்தை பாதுகாக்கிற காவலர் தான் நீங்கள். அமைச்சரவையை அமைக்கும் அதிகாரம் எந்த காலகட்டத்திலும் ஆளுநருக்கு கிடையாது.

இப்போதுதான் ஆளுநருக்கு கேடுகாலம் ஆரம்பித்துள்ளது. நாளை நான் அந்த நோட்டீசை வாங்கிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் எப்படி வழக்கு தொடரப்படும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆளுநரை காப்பாற்ற முடியாது. அவரை பதவிநீக்கம் செய்தற்கான நடவடிக்கையை எடுப்போம். நான் சொன்னால் அது நடக்கும். நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடரும்போது மோடியாலும் ஆளுநரை காப்பாற்ற முடியாது. 

இன்றைக்கு மணிப்பூரில் ராகுல் காந்தியை உள்ளே விடாமல் தடுத்திருக்கிறார்கள். நாளை இந்தப் பிரச்னை அந்தப் பிரச்னை எல்லாம் சேர்ந்து அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரளயம் ஏற்படப்போகிறது. அந்தப் பிரளயத்தில் மோடியின் ஆட்சி உள்ளது. நீதிமன்றங்கள் நினைத்தால் உங்களுடைய ஆட்சியையே கலைக்கும் அதிகாரம் உள்ளது.

ஏன் உங்களுக்கு இவ்வளவு அவசரம். எங்களுக்கு தேவை என்றால் அமைச்சரவையில் வைத்துக் கொள்வோம் இல்லை என்றால் நீக்கிவிடுவோம். அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. ஒரு சட்ட ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம்.

கழகத் தோழர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் வரும் காலம் பயங்கரமான காலமாக இருக்கும். எதையும் செய்யும் அளவிற்கு மோடி துணிந்து விட்டார். 

ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அகில இந்திய அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செல்வாக்கு அபரிவிதமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தின் தலைவராக தான் மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார். இனி நீங்கள் இப்படிப்பட்ட சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து எங்களை நசுக்குவீர்கள். ஆனால் மோடி உட்கார்ந்த இடத்தில் ஸ்டாலினை நீங்களாகவே கொண்டு போய் உட்கார வைக்க வேண்டிய காலம் அமைந்துவிடும் என ஆர்.எஸ்.பாரதி பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா மீது கொலை குற்றவழக்கு உள்ளது. அவரே மத்திய அமைச்சராக உள்ள போது, செந்தில் பாலாஜி வழக்கு என்பது நிலுவையில் உள்ள முடிந்து போன வழக்கு. அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. மேலும் மத்திய அமைச்சர்களாக உள்ள 33 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அவர்கள் பதவியை ராஜிநாமா செய்வார்களா?

பிரதமர் மோடி மீது குஜராத் கொலை வழக்கு உள்ளது. அவர் இந்தியாவின் பிரதமராக வரவில்லையா?

இது தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT