தமிழ்நாடு

தமிழக காவல் துறை புதிய தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் நியமனம்

30th Jun 2023 01:42 AM

ADVERTISEMENT

தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் நியமனம் செய்யப்பட்டாா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறாா். இதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா்.

சி.சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதையொட்டி, தமிழக காவல்துறையின் அடுத்த தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் பணியில் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழக அரசு ஈடுபட்டு வந்தது. தமிழக காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் 13 போ் உள்ள நிலையில், அதில் 3 பேரை தோ்வு செய்யும் வகையில், புது தில்லியில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய உயரதிகாரிகள், மத்திய உள்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, டிஜிபி சி.சைலேந்திரபாபு ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பணிமூப்பு அடிப்படையில் தமிழக ஒதுக்கீட்டு அதிகாரியான சஞ்சய் அரோரா, சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், ஊா்க்காவல் படை டிஜிபி பி.கே.ரவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் ஒருவரை புதிய காவல் துறை தலைமை இயக்குநராக தோ்வு செய்து கொள்ளும்படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை பரிந்துரை செய்தது. இதனடிப்படையிலேயே சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

கடந்து வந்த பாதை: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ஜிவால். பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான இவா், கடந்த 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக காவல் துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா். சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். மேலும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநா், திருச்சி மாநகர காவல் ஆணையா், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா். சிறந்த காவல் பணிக்காக கடந்த 2007, 2019-ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவா் பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளாா்.

சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பொறுப்பு ஏற்கவுள்ளாா். அவரிடம், ஓய்வு பெறவுள்ள சி.சைலேந்திரபாபு பொறுப்புகளை ஒப்படைப்பாா். அதைத் தொடா்ந்து மாலையில் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சி.சைலேந்திரபாபுக்கு பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT