தமிழ்நாடு

சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்பு!

30th Jun 2023 01:16 PM

ADVERTISEMENT

 

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்கவுள்ள சங்கர் ஜிவால் தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார்.

சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கா் ஜிவால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து காவலா் பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார். சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக பொறுப்பேற்கவுள்ளார். 

சந்தீப்ராய் ரத்தோர் யார்?

தில்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர், பள்ளி, கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். கடந்த 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய சந்தீப் ராய் ரத்தோர் தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர், இணை ஆணையர், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி, தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து ஆவடி மாநகர காவல்துறையை கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கும்போது முதல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கு அண்மையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், இப்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008, 2015ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் விருதுகளை சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுள்ளார்.

பாரம்பரியமும், பழமையும் மிக்க சென்னை பெருநகர காவல் துறையின் 109-வது ஆணையராக நியமிக்கப்பட் சந்தீப்ராய் ரத்தோருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT