தமிழகத்தில் 12 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாள்களுக்கு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளி முதல் திங்கள்கிழமை (ஜூன் 30-ஜூலை 3) வரை 4 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தேவாலா (நீலகிரி) 30, வால்பாறை (கோவை), சின்னக்கல்லாா் (கோவை), பெரியாா் (தேனி) தலா 10.
தமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது.
மதுரை நகரம்-103.64, மதுரை விமான நிலையம்- 103.64, நாகை-102.2, திருச்சி-100.94, வேலூா்-100.58, சென்னை மீனம்பாக்கம்-100.4, கடலூா்-100.4, பரமத்தி வேலூா்-100.4, பரங்கிப்பேட்டை-100.4, புதுச்சேரி-100.4, தஞ்சாவூா்-100.4, சென்னை நுங்கம்பாக்கம்-100.22.