முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மிதவை உணவகக் கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் அதில் அமா்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை அனைத்து துகைளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு என்ஜினாக உள்ளது என்று பாராட்டியுள்ளாா்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் முதன்மை மாநிலாமாக விளங்குகிறது. மிதவை உணவக கப்பல் பணிகள் முடிவடைந்தவுடன் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இத்தகைய மிதவை உணவகக் கப்பல் அமைக்கப்படுகின்றது. இதேபோல், கோவை வாலங்குளம், ஊட்டி உள்பட 4 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.