கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளது. புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கட்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் வி கே சிங் நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பொருளாதாரத்தில் 10ஆவது இடத்தில் இருந்து இந்தியா இந்த ஒன்பது ஆண்டு ஆட்சி காலத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2015ல் 428 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த ஒன்பது ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம் ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தது கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 74 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளது. புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் மத்திய அரசு அதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும். தாமிர பரணி நதியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பதை அரசு கண்காணித்தால் மட்டும் போதாது. மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.