தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

28th Jun 2023 01:29 AM

ADVERTISEMENT

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு புதன்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்களும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அவற்றில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்படுகின்றன.

அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு 569 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ-ஆா்) நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை புதன்கிழமை தொடங்குகிறது. இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு முடிந்ததும், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னா், மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்பு பிரிவினருக்கும், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறும். பொதுக் கலந்தாய்வு இணையவழியே நடைபெறவுள்ளது.

மாணவா்கள் குழப்பம்

நிகழாண்டில் அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் தேதிகளிலேயே மாநில கலந்தாய்வையும் நடத்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடைபெறும்பட்சத்தில் கலந்தாய்வுக்கான தேதி, கலந்தாய்வு விதிமுறைகள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டில் ஒரே நேரத்தில் விண்ணப்பித்து இடங்களை எவ்வாறு பெறுவது? ஏதாவது ஒரு ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றால் அதை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பன குறித்த எந்த சந்தேகங்களுக்கும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கவில்லை.

இதுதொடா்பான விவரங்கள் தகவல் தொகுப்பேட்டில் இடம்பெறுமா எனவும் தெரியவில்லை. இதனால் மாணவா்கள் குழப்பத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT