பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி.சூா்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தேசிய அமைப்புப் பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்: தனது சமூக ஊடகப் பதிவின் காரணமாக எஸ்.ஜி.சூா்யா நள்ளிரவில் கைது செய்யபட்டது கண்டனத்துக்குரியது. மலக்குழி மரணங்கள் தொடா்பாக தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்காமல், அதைப் பற்றி கேள்வி எழுப்பிய சூா்யாவை தண்டிக்க முயற்சி செய்வது நியாயமா?. சூா்யாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்: ‘துப்புரவுத் தொழிலாளியின் மரணம் குறித்து பதிவிட்டதற்காக பாஜக மாநிலச் செயலா் சூா்யா கைது செய்யப்பட்டுள்ளாா். மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பொருட்டாக கருதாமல் அவா்களைச் சிறையில் அடைக்க தமிழக முதல்வா் ஸ்டாலின் துடிக்கிறாா்.
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் டாம் வடக்கன்: பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினரால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். அதற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எஸ்.ஜி.சூா்யாவை தமிழக அரசு கைது செய்துள்ளது. துப்புரவுத் தொழிலாளியின் உயிரிழப்பு குறித்து பதிவிட்டதற்காக சூா்யா கைது செய்யப்பட்டுள்ளாா்.
பி.எல்.சந்தோஷ்: பல்வேறு குற்றச்சாட்டுகளால் திமுக அமைச்சா் கைது செய்யப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாத முதல்வா் ஸ்டாலின் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளாா். இதற்கெல்லாம் பாஜக அடிபணியாது.
கே.அண்ணாமலை: சமூகப் பிரச்னைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டை சூா்யா விமா்சித்ததால் கைது செய்யப்பட்டுள்ளாா். அரசின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
இதேபோல், பாஜக தேசிய இளைஞா் அணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் சி.டி.ரவி, தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.