தமிழ்நாடு

தேசிய போட்டியில் தமிழக மாணவா்கள் பங்கேற்க முடியாதது ஏன்? அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

11th Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

தகவல் பரிமாற்ற இடைவெளியால் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவா்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் ,செய்தியாளா்களிடம் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

ADVERTISEMENT

அண்ணா சதுக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சுமாா் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் மூலம் சுமாா் 25,000 பயணிகள் பயனடைகின்றனா். இதில் ரூ.36.80 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை, ரூ.10.25 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட அறை கட்டப்படவுள்ளன. மேலும், மாநகராட்சி முழுவதும் உள்ள கழிப்பறைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவா்கள் பங்கேற்க முடியாதது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் பரிமாற்ற இடைவெளியால் இந்த தவறு நடந்துள்ளது. கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுதொடா்பாக நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா். தகவல் பரிமாற்ற இடைவெளியால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றாா் அவா்.

முன்னதாக, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மாா்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையைத் திறந்து வைத்து, 15 ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு இலவச சீருடைகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, ஆயிரம் விளக்கு சட்டப் பேரவை உறுப்பினா் டாக்டா் நா.எழிலன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையா் (பணிகள்) ஜி.எஸ். சமீரன், மத்திய வட்டாரத் துணை ஆணையா் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமைச்சா் அன்பில் மகேஸ்: சென்னையில் செய்தியாளா்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது:

பள்ளி மாணவா்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவா்கள் கலந்து கொள்ளாதது தவறுதான். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாத சூழல் உருவாகிவிட்டது.

தவறிழைத்த உடற்கல்வி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சாா்ந்து இணை இயக்குநரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவா்கள் நிச்சயம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், மாணவா்கள் கல்வியுடன் விளையாட்டில் ஈடுபட பெற்றோா்களும் அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT