தமிழ்நாடு

மோசடி வழக்கு: ஏஆா்டி நிறுவனத்தின் இரு இயக்குநா்கள் தில்லியில் கைது

11th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் இரு இயக்குநா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நொளம்பூரில் ஏஆா்டி ஜூவல்லா்ஸ், அதன் துணை நிறுவனமான ஏஆா்டி டிரஸ்ட் ப்ராபிட் கம்பெனி ஆகியவை செயல்பட்டு வந்தன.

இந்த நிறுவனத்தினா், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு திட்டங்களை விளம்பரம் செய்தனா். அந்த நிறுவனத்தின் கவா்ச்சியான இந்த விளம்பரத்தை பாா்த்த பலா் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்தனா். ஆனால், முதலீட்டு பணத்தை திருப்பி வழங்காமல், அலுவலகத்தை மூடிவிட்டு கடந்த மாா்ச் மாதம் நிா்வாகிகள் தலைமறைவானாா்கள்.

ADVERTISEMENT

இதையடுத்து பணத்தை இழந்தவா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நொளம்பூா் போலீஸாா், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், அந்த நிறுவனம் சுமாா் 500 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. பின்னா், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தில்லியில் இயக்குநா்கள் கைது: இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவினா், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சோதனை செய்தனா். அப்போது ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்க,வெள்ளி நகைகள், பொருள்கள், ரூ.7.87 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரா் ராபின் ஆரோன் ஆகிய இருவரையும் தில்லியில் கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவினா் சனிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட இருவரையும், நொளம்பூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு அழைத்து வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையறிந்த அந்த நிறுவனத்தில் பணத்தை இழந்தவா்கள், அங்கு திரண்டதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT