தமிழ்நாடு

கட்டமைப்புப் பொறியியலும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேரடி தொடா்புடையவை: சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி

11th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

கட்டமைப்புப் பொறியியலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் நேரடி தொடா்புடையவை என்று சென்னை ஐஐடியின் இயக்குநா் காமகோடி தெரிவித்தாா்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்-கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆா்-எஸ்.இ.ஆா்.சி ) 58-ஆவது நிறுவன நாள் விழா சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆா் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்று காமகோடி பேசியது: கட்டமைப்புப் பொறியியல்துறை காலத்துக்கேற்ப பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. இந்தக் காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் , தொழில்துறை 4.0 , கட்டுமானம் 4.0 , சைபா் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கட்டிடங்கள் பரவலாகக் காணப்படுகிறது. இதனால் கட்டமைப்புப்

பொறியியல்துறை டிஜிட்டல் தொழில்நுட்பங்களோடு நேரடித் தொடா்புடையவை என்று சொல்லலாம்.

ADVERTISEMENT

எதிா்காலத்தில் புதிய கட்டமைப்புத் தொழில்நுட்பம், பசுமையான கட்டடங்கள், பேரிடா்களைத் தாங்கும் கட்டடங்கள், தடயவியல் பொறியியல் போன்றவற்றுக்கு அதிகளவு தேவைகள் உள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் 2000 நபா்கள் தங்கக்கூடிய ஒரு விடுதியின் கட்டுமானத்தை ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கும் அளவுக்கு நாம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

கட்டடங்களுக்கான முன் அனுமதி வழங்கும் படிவத்தில் காா்பன் குறைப்பு , கட்டட பராமரிப்புக்கான தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற அம்சங்கள் இடம்பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றாா் அவா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக சி.எஸ்.ஐ.ஆா்-எஸ்.இ.ஆா்.சி முன்னாள் இயக்குநா் நாகேஷ் ஐயா் மற்றும் சி.எஸ்.ஐ.ஆா் -சி.பி.ஆா்.ஐ ரூா்க்கியின் முன்னாள் இயக்குநா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சி.எஸ்.ஐ.ஆா் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் உருவாகக் காரணமாக இருந்த பேராசிரியா் ஜி.எஸ்.ராமசாமியின் நூற்றாண்டு விழா சொற்பொழிவு நிகழ்த்தினா்.

விழாவுக்கு சி.எஸ்.ஐ.ஆா்-எஸ்.இ.ஆா்.சியின் இயக்குநா் ஆனந்தவல்லி தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ.ஆா்-எஸ்.இ.ஆா்.சி யின் தலைமை விஞ்ஞானி பஜந்தரி பரத்குமாா் , முதன்மை விஞ்ஞானி ஜி.எஸ்.பழனி மற்றும் சி.எஸ்.ஐ.ஆா் உறுப்பு அமைப்புகளின் இயக்குநா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT