தமிழ்நாடு

அரசு சொத்துகளின் வாடகை நிலுவையை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துகளின் வாடகை நிலுவையை வசூலிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிா்த்து அங்கு கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமாா் ஜெயின் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். அந்த மனுவில், கட்டடம் சேதமடையவில்லை எனவும், முறையாக வாடகை செலுத்தி வருவதால், காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஓசூா் சாா் ஆட்சியா் தரப்பில், மனுதாரா்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடா்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல எனவும், மனுதாரா்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சாா் ஆட்சியா் அனுப்பிய நோட்டீஸில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, குத்தகை சொத்துகளின் வாடகை நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT