தமிழ்நாடு

வைகோ தொடர்ந்து முரண்பாடான கருத்துகளைப் பரப்பி வருகிறார்: சு.துரைசாமி

10th Jun 2023 03:12 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: மதிமுக பொதுச் செயலாளர் தொடர்ந்து என் மீது முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துகளைப் பரப்பி வருவதாக மதிமுக முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  

திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திருப்பூர் சு.துரைசாமி பேசியதாவது: 

கடந்த சில நாள்களுக்கு முன்பாக மதிமுகவின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தேன். அன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச்செயலாளர் வைகோ பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதில், தொழிற்சங்கத்துக்குள் பிரச்னை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பேரறிஞர் அண்ணாவின் ஒப்புதலுடன் 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1959ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த சங்கத்தின் முதல் நிர்வாகிகள் தேர்தல் 1960ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் தலைவராக கோவை செழியனும், பொதுச் செயலாளராக திருப்பூர் துரைசாமியும், பொருளாளராக காட்டூர் கோபாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் பின்னர் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த சங்கத்தின் அனைத்து பொறுப்புக்களையும் பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி ஏற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் எந்தவிதமான குறைபாட்டையும் யாரும் கூறமுடியாது. இந்த நிலையில், வைகோ தொழிற்சங்கத்தில் பிரச்னை என்று உண்மைக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 

மதிமுக சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் நான் பங்கேற்கவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரது செய்திகள் முன்னுக்குப்பின் முரண்பாடாக உள்ளது. திமுகவுக்கு நாள் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். ஆனால் திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் குழு தலைவரே நான்தான். எனது தலைமையில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. 

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் வெற்றி பெற்றவுடன் எனது புகைப்படத்தைப் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆகவே, வைகோ தற்போது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யை சொல்வது போல் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களைப் பரப்பி வருகிறார் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT