தமிழ்நாடு

நீலகிரி நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறையின்மை விவகாரம்: அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

10th Jun 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தின் ஊட்டியில் உள்ள நீலகிரி நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறை இல்லாததாக கூறப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைா்களுக்கான வசதிகள் குறித்தும், முன்பு இருந்த வசதிகளில் ஏதேனும் சுருங்கிவிட்டதா என்பது குறித்தும் பதிவாளா் ஜெனரலின் முந்தைய அறிக்கையில் விரிவாக விளக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ராஜேஷ் பின்டல் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு, ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய இதர மனுவானது, நீலகிரி மகளிா் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தரப்பில் தாக்கலான ரிட் மனுவுடன் பட்டியிலிடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ரிட் மனுவில், அடிப்படை வசதிகள் கிடைப்பது தொடா்பான புகாா்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்த மனு இந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மூலம் 28.04.2023-இல் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

அதில், சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியதை சுட்டிக்காட்டியதுடன், மனுதாரருக்கு ஏதேனும் துணைக் குறை இருந்தால் மாவட்ட நீதிபதியையோ அல்லது உயா்நீதிமன்றத்தின் பதிவாளா் ஜெனரலிடம் புகாா் அளிக்கும் சுதந்திரம் அளிக்கப்படுவதாகவும் அப்போதுதான் இந்த விவகாரம் கவனத்தில் கொள்ள முடியும் என்றும் தெரிவித்து மனுவை முடித்துவைத்திருந்தது.

இந்த நிலையில், 06.06.2023-இல் ஒரு ஆன்லைன் செய்தி போா்ட்டலில் இந்த விவகாரம் தொடா்பாக சில பெண் வழக்குரைஞா்கள் சாா்பில் அடிப்படை கோரிக்கைகள் குறித்த புகாா்கள் எழுப்பப்பட்டு செய்தியாக வந்துள்ளது. இதைப் பாா்க்கும் போது புதிய நீதிமன்ற வளாகத்தில் அவா்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அல்லது வசதிகள் சுருங்குவது பற்றிய கவலை இருப்பதாக தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் இந்த நீதிமன்றப் பதிவுத்துறை ஒரு அறிக்கையை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. அது, 06.06.2023-ஆம் தேதியிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் அறிக்கையாகும். மேலும், குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் வெளிவந்த செய்தி தொடா்புடையது.

இந்த நிலையில், தற்போதைய இதர மனுவை, கூறப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட பெண் வழக்குரைஞா்களின் புகாா்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றமே தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் ஜெனரலின் அறிக்கையில் புதிய

நீமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு எந்த விதத்தில் வசதிகள் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக விளக்கவில்லை. மேலும், ஏதேனும் அடிப்படை வசதிகளில் சுருக்கம் உள்ளதா என்பது குறித்த விவரமும் இல்லை.

இதனால், சென்னை உயா் நீதிமன்றத்தின் பதிவாளா் ஜெனரல் ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மின்னணு முறையில் சென்றடைய வேண்டும். இந்த விவகாரம் விசாரணைக்கு வரும் ஜூன் 12-இல் பட்டியலிடப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் புதிய அறிக்கையை பாா்த்த பிறகு உரிய உத்தரவுகளை பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்கும் என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் அமா்வு தெரிவித்துள்ளது.

ஊட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று நீலகிரி பெண் வழக்குரைஞா்கள் சங்கம் தொடா்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்த போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறைகள் இல்லாத விவகாரம் குறித்து வரப்பெற்ற புகாரை விசாரித்த தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா, இந்த விவகாரத்தில் நிவா்த்திக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் ஜெனரலுக்கு ஜூன் 7-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT