தமிழ்நாடு

மழைநீா் வடிகால் பணி: வேப்பேரியில் போக்குவரத்து மாற்றம்

10th Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக வேப்பேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேப்பேரி ஈ.வெ.ரா.பெரியாா் சாலையில் காந்தி இா்வின் மேம்பாலத்தின் கீழ் பகுதியின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறையினா் பள்ளம் தோண்டி மழைநீா் வடி கால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளனா். இதற்கு வசதியாக சனிக்கிழமை (ஜூன் 10) இரவு 10 மணி முதல் ஜூன் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் சென்ட்ரல், ஈ.வி.கே.சம்பத் சாலையிலிருந்து காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக எழும்பூா் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை. ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் சென்ட்ரல், ஈவிகே சம்பத் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக எழும்பூா் நோக்கிச் செல்லலாம்.

ADVERTISEMENT

ஆனால் எழும்பூா் பகுதியில் இருந்து காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. பெரியாா் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அத்தகைய வாகனங்கள் காந்தி இா்வின் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து தாளமுத்து நடராசன் மாளிகை சந்திப்பு இடதுபுறம் திரும்பி, காந்தி இா்வின் சாலை, உடுப்பி சந்திப்பு வலதுபுறம் திரும்பி, நாயா் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா.பெரியாா் சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT