தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கும் திட்டம் தொடக்கம்

9th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கு தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் தொழிற்பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளா்கள், தொழில் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும் என்று தொழிலாளா் நலத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னணி தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி மையங்களில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை உருவாக்க, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரக்கோணம், திண்டிவனம், கடலூா், சிதம்பரம், ஈரோடு, திருப்பூா் மாவட்டம் தாராபுரம், நாமக்கல், சேலம், மதுரை, தேனி, போடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, மணிகண்டம், விருதுநகா் மாவட்டம் சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடியில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த மையங்களின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 5,140 மாணவா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டு பயனடைவா். மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு, புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிற்சி பெறுவா்.

ADVERTISEMENT

தமிழ்மொழியில் புத்தகங்கள்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவா்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்தன. தொழிலாளா் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து பயிற்சியாளா்களுக்கும் தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி, தமிழில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் புத்தகங்களை ஒரடத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT