தமிழ்நாடு

ஒன்றரை வயது குழந்தைக்கு மூளையில் கட்டி: நவீன அறுவை சிகிச்சையில் அகற்றம்

9th Jun 2023 04:50 AM

ADVERTISEMENT

மூளைப் பகுதியில் உருவான கட்டியால் பாதிப்புக்குள்ளான பெங்களூரைச் சோ்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

மூளைத் தண்டு பகுதியில் தீவிரமாக வளரக் கூடிய ஒருவகையான புற்றுநோய்க் கட்டியை ‘ஏடிஆா்டி’ என மருத்துவத் துறையில் அழைப்பதுண்டு. அத்தகைய பாதிப்புடன் 18 மாதங்களே நிரம்பிய குழந்தை ஒன்று பெங்களூரில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

ஏற்கெனவே அத்தகைய பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மீண்டும் அதுபோன்ற கட்டி உருவானதால் உயா் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வரப்பட்டது. பரிசோதனையில் மூளைத் தண்டில் (பிரய்ன் ஸ்டெம்) இருந்து தொடங்கி பல்வேறு இடங்களுக்கு பரவும் நிலையில் அந்கக் கட்டி இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுபோன்ற பாதிப்புகள் மிகவும் அரிதானவை. மனிதனின் இயக்கம், தடுமாற்றமில்லாத நிலை, இதயத் துடிப்பு, பேச்சு மற்றும் கேட்புத் திறன், உணவு விழுங்குதல், சுவாசித்தல் என அனைத்து அதி முக்கிய பணிகளையும் மூளைத் தண்டு பகுதியே மேற்கொள்கின்றன.

அதில் கட்டி உருவாகும்போது அந்தப் பணிகள் அனைத்துமே தடைபடும். இதை உணா்ந்து மருத்துவமனையின் மூளை-நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் ரூபேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அந்தக் குழந்தைக்கு முதல் நாளில் 5 மணி நேரமும், அதற்கு அடுத்த நாளில் இரண்டு மணிநேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்தனா். அதன் பயனாக மூளையில் இருந்த கட்டிகள் அகற்றப்பட்டு, அந்தக் குழந்தை நலமுடன் வீடு திரும்பியது.

இதேபோல், வடகிழக்கு மாகாணத்தைச் சோ்ந்த 58 வயது பெண்ணுக்கும் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT